ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த்(70). விவசாயியான இவருக்கு 73 வயதான சந்தோஷ் குமாரி என்ற மனைவி இருந்தார். கடந்த ஆகஸ்ட் 27, 1980ஆம் ஆண்டில் திருமணமான இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சுபாஷ் சந்த், கடந்த 2006ஆம் ஆண்டு கர்னால் குடும்ப நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்ந்தார்.
அவர் தொடர்த்த அந்த வழக்கை, கடந்த 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் நிராகரித்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மீடியசன் மூலம் முடிவுக்கு வந்த வழக்கில், மனைவிக்கு ரூ.3.1 கோடி ஜீவனாம்சம் பணம் கொடுக்க, விவசாயியான சுபாஷ் சந்த் சம்மதித்தார்.
அதன்படி, டிடி மூலம் ரூ.2.16 கோடி பணமும், பயிர் விற்பனை செய்து வந்த ரூ.50 லட்சம் ரொக்க பணமும், ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை மனைவிக்கு அவர் ஒப்படைத்தார். அதன் பின்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதிர் சிங் மற்றும் ஜஸ்ஜித் சிங் பேசி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த தம்பதிக்கு விவகாரத்து கொடுத்து உத்தரவிட்டது. 18 வருடங்களாக நீடித்து வந்த சுபாஷ் சந்தின் சட்டப் போராட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.