63 குழந்தைகள் பலி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி –யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் திடீரென தடைபட்டதே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், குழந்தைகள் உயிரிழந்ததற்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுவது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு விசாரித்து அறிக்கை அளிக்கும்.
விசாரணை அறிக்கை கிடைத்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்றால் அதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனம் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.