ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த விபத்து காரணமாக ஆறு ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மங்களூரில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாச்சி செல்லும் விவேக் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை காலை 8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏசி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆறாம் தேதி காலை 6:20 மணிக்கு பெங்களூர் செல்லும் வாராந்திர ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழாம் தேதி மதியம் 2 மணிக்கு காமாக்யாவிலிருந்து பெங்களூரு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ரயில் விபத்து காரணமாக 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 81 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளதாகவும், 10 ரயில்கள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.