தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் போன்றவைகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு தொடர்ந்து அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் காற்றுமாசு காரணமாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்தாலோ அல்லது பட்டாசுகளை வாங்கினாலோ ஆறு மாதம் சிறை, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது. அதேபோல் பட்டாசு தயாரிப்போர், விற்பனை செய்வோர், அவற்றை வாங்கி சேமித்து வைப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர், கடந்த 16ஆம் தேதி வரை தடையை மீறியதாக 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 2917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.