புதுச்சேரி சுகாதாரத்துறையில் 136 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கியதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிவதற்காக 136 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதனிடையே, "மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரங்கசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: "கரானா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் ஒழிய மரணத்திலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிச்சயமாக ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் கரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். தேவையான தடுப்பு ஊசிகள் சுகாதாரத்துறை இடம் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.