இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சென்ற பொழுது குண்டுகட்டாக கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்கள் கங்கை ஆற்றில் தாங்கள் வாங்கிய பதக்கங்களை வீசுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், டெல்லி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் விசாரணை முடியும் வரை காத்திருக்கும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு தற்பொழுது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் அமைச்சர்களை சந்தித்தனர். சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாகவும் மல்யுத்த வீராங்கனைகள் பாதுகாப்பு பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து இந்த போராட்டத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்ட குழு அறிவித்துள்ளது. மேலும், அடுத்தகட்டமாக ஜூன் 15க்குள் விசாரணை நிறைவு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.