உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த வந்த திராத் சிங் ராவத் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த மார்ச் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றார்.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், ஆறு மாதத்திற்கு சட்டமன்ற தேர்தலில் வெல்லாவிட்டால் அவர் முதல் அமைச்சராக இருக்கமுடியாது என்பதால், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் திராத் சிங் ராவத் இடைத்தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. ஆனால் கரோனா காரணமாக இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவுதான் என தகவல்கள் வெளியானது. இதனையொட்டி அரசியலமைப்பு நெருக்கடியை தவிர்க்க தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக திராத் சிங் ராவத் தெரிவித்தார்.
இந்தநிலையில் மம்தா பானர்ஜியை முதல்வர் பதவியில் தொடர விடாமல் செய்வதற்காகவே, பாஜக உத்தரகண்டில் முதல்வரை மாற்றியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரண் மகாரா கூறுகையில், "உண்மையான பிரச்னை என்னவென்றால், உண்மையான இலக்கு திராத் சிங் ராவத் அல்ல. மம்தா பானர்ஜி. அரசியலமைப்பு ரீதியிலான அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது பாஜக. அவர்கள் மம்தா இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க திராத் சிங் ராவத்தை தியாகம் செய்கிறது" என கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி தேர்தலில் தோல்வியை தழுவினாலும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் மம்தா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் முதல்வர் பதவியை இழக்க நேரிடும்.தற்போது இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதால் திராத் சிங் ராஜினாமா செய்ததையடுத்து மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் அமைப்பு சட்டப்படி, சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்தாலோ அல்லது தேர்தல் ஆணையம் மத்திய அரசோடு ஆலோசித்து குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என அறிவித்தலோ அங்கு ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த அவசியமில்லை. ஒருவேளை தேர்தல் ஆணையம் கரோனாவை காரணம் காட்டி மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் மம்தா பானர்ஜி பதவி விலக நேரிடும்.