Published on 06/02/2021 | Edited on 06/02/2021
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நீக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டு சிறையிலும் வைக்கப்பட்டனர்.
இதனையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு இணைய சேவை 2ஜி வேகத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. இதன்பிறகு கடந்த ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாக இணைய சேவை 4ஜி வேகத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் 18 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் முழுவதும் 4ஜி இணைய சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பாதுகாப்பு சூழ்நிலையைக் கவனமாக ஆராய்ந்த பிறகு, 4ஜி சேவை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.