உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக ரஷ்யாவில் அதிக ஊதியத்துடன் வேலைகள் காலியாக இருப்பதாக விளம்பரங்கள் செய்து ஏஜென்ட்கள் பலர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள இளைஞர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி ரஷ்யாவுக்கு கடத்தி வந்ததாக கடந்த மார்ச் மாதம் அன்று அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு ரஷ்யாவில் வலுக்கட்டாயமாக ராணுவப் பயிற்சி அளித்து ரஷ்யா-உக்ரைன் போருக்கு தயார்ப்படுத்தப்பட்டனர். இது தொடர்பான செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இது குறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ, இந்திய இளைஞர்களை ரஷ்யாவிற்கு கடத்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கடந்த மார்ச் மாதம் சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் ஏஜெண்டுகளான கன்னியாகுமரியைச் சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையைச் சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவைச் சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர் சி.பி.ஐ தற்போது அதிரடியாக கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைத்தளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்ததும், கடத்தப்பட்ட இளைஞர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.