உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ளது கிங்ஸ் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம். இங்குள்ள குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளுக்கு, பொருத்தப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நான்கு குழந்தைகளுக்கு ஒரு சிலிண்டர் வீதம் பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது.
போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால், ஒரே சிலிண்டர் கருவியுடன் பொருத்தப்பட்ட நான்கு குழந்தைகளில் மூன்று பரிதாபமாக உயிரிழந்தன. குழந்தைகளின் இந்த உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரேயொரு குழந்தைதான் இறந்தது என தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.