![CORONAVIRUS PREVENTION MINISTRY OF HOME AFFAIRS SOP](http://image.nakkheeran.in/cdn/farfuture/redARBtfbubvDK8hj8MGOI3rsqv5SbQ9MCffL9JK3MI/1616504176/sites/default/files/inline-images/HOME%203322.jpg)
தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் நாளுக்கு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளனர். சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. ஆர்டி- பிசிஆர் (RT- PCR) பரிசோதனையை 70%- க்கும் அதிகமாக மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை, தொடர்பைக் கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட வேண்டும். பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள், கூட்டம் நிறைந்த இடங்கள் ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். கரோனா பாதிப்பின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். வீடு, வீடாகச் சென்று கரோனா தொற்று குறித்து மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.