ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (26/02/2022) இரவு 08.00 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். உக்ரைனில் இருந்த 219 இந்தியர்கள் சாலை மார்க்கமாக ருமேனியாவுக்கு வந்த நிலையில் விமானத்தில் தாயகம் அழைத்து வரப்பட்டனர். மும்பை விமான நிலையம் வந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார். அத்துடன், மத்திய அமைச்சருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இந்திய மாணவர்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், "உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பதே மத்திய அரசின் இலக்கு. உக்ரைனில் உள்ள கடைசி இந்தியர் நாடு திரும்பும் வரை மத்திய அரசு மீட்புப் பணியைத் தொடரும்" எனத் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவி அகன்ஷா ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் மிகவும் பயந்தேன்; நாங்கள் பாதுகாப்பாக வந்தடைந்தோம். இந்திய அரசாங்கத்திற்கு நன்றி. முதலில் மீட்கப்பட்டவர்கள் நாங்கள். ஓரிரு நாட்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது" எனத் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் ஒருவர் கூறுகையில், "நமது மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மும்பையில் நாங்கள் இறங்கியவுடன் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த வாய்ப்பை வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மும்பை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைனில் இருந்து மும்பை விமான நிலையம் வரும் இந்தியர்கள் கரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்காவிடில் கரோனா பரிசோதனை நடத்தப்படும். ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும், அதற்கான கட்டணத்தை விமான நிலையமே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்த பிறகே இந்தியர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்" என்று கூறியுள்ளது.
இதனிடையே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு ஆப்ரேஷன் 'கங்கா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.