மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பணிபுரிந்துவந்த கேரளாவைச் சேர்ந்த 200 செவிலியர்கள் கடந்த ஒருவார காலத்தில் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் இந்தியா முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். கடுமையான மன அழுத்தத்தையும், பணிச்சுமையையும் எதிர்கொண்டு வரும் இவர்கள், இவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பணியை ராஜினாமா செய்வதும் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தங்களது சொந்த ஊர்களை விட்டு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் இருப்பிடம், உணவு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் காரணங்களால் பணியினை விடவேண்டிய சூழல் உருவாகிறது.
அந்த வகையில் மேற்குவங்கத்தில் பணி செய்துவந்த பிற மாநிலத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அண்மையில் பணியிலிருந்து விலகினர். இந்த நிலையில், கடந்த சில தினங்களில் மகாராஷ்டிராவின் புனே, மும்பை பகுதிகளில் செவிலியராகப் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர் ராஜினாமா செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதல் பணிச்சுமைகளைச் சுமக்கவேண்டியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பணியை ராஜினாமா செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.