ஆம்புலன்ஸ் இல்லாததால் 20கிமீ நடந்துசென்ற கர்ப்பிணிப்பெண்: நடுரோட்டில் பிறந்த குழந்தை இறப்பு!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், 20கிமீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு நடுரோட்டில் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை சில நிமிடங்களில் இறந்ததால் பெண்ணின் உறவினர் மருத்துவமனை நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், காட்னி மாவட்டம், பர்மானி கிராமத்தைச் சேர்ந்தவர் பீனா. இவர் சம்பவ தினத்தன்று பிரசவ வலியால் துடித்துள்ளார். பார்ஹி மகப்பேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கேட்டு அழைத்து பலமணி நேரங்கள் ஆகியும் வராததால், அவர் தன் உறவினருடன் 20 கிமீ நடந்தே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு அருகில் உள்ள காவல்நிலையம் முன்பாக, நடுரோட்டில் வைத்து பீனாவிற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை நேரடியாக தரையில் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பீனாவின் பெற்றோர் குழந்தையின் மரணத்திற்கு, மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தில், பீனாவிற்கு 7 மாதத்திலேயே குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததுள்ளது. அதுதான் குழந்தை இறப்பிற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வரத்தவறியது குறித்து கேட்டதற்கு, ‘அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இல்லாததால், அனுப்பிவைக்க முடியவில்லை’ என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்