17- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் கூடியது. இந்த கூட்டத்தொடரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அத்துடன் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து முத்தலாக், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா, என்.ஐ.ஏ மசோதா, அணை பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆகஸ்ட் 7- ஆம் தேதி வரை மக்களவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா.