புதுச்சேரியில் தமிழ் இதிகாசங்கள், காப்பியங்களை படித்தறிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவி ஒருவர் சிறிய காகிதத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
இக்கால கட்டத்தில் தமிழ் மொழி, தமிழ் இலக்கிய நூல்களான திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கண இலக்கிய நூல்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இன்றைய இளம் தலைமுறையினரிடையே வெகுவாக குறைந்துள்ளது. இதை போக்கும் வகையிலும் அனைவரும் தமிழ் காப்பியங்களையும், வரலாறுகளையுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் பயிலும் மாணவி ஸ்ரீ கஜலட்சுமி என்பவர் சிறிய பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 cm X 42 cm அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் கலந்து கொண்டு மாணவிக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து, பாராட்டினார். மேலும் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மிகாந்தன், பிரஸிடன்ஸி பள்ளியின் தாளாளர் கிரிஸ்டி ராஜ் ஆகியோர் மாணவியை பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளையின் நிர்வாகி S.பிரேம்குமார், செயலாளர் G.கீர்த்தனா தலைமையில் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.