ஒரே IMEI எண்ணில் இந்தியா முழுவதும் 13,000 செல்போன்கள் பயன்பாட்டில் இருப்பதை உத்தரப்பிரதேச மாநில போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் தயாரிக்கும் அனைத்து செல்போன்களுக்கும், 15 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான IMEI எண்கள் வழங்கப்படும். பொதுவாக எதாவது குற்றச்செயல்கள் நடைபெறும் பொழுதோ அல்லது செல்போன் காணாமல்போகும் பொழுதோ இந்த IMEI எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். செல்போன்களின் மிக முக்கிய பாதுகாப்பு காரணியாகக் கருதப்படும் இந்த IMEI எண்ணை வைத்தே மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரின் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் புதிதாக VIVO செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அது பழுதடைந்து விடவே, அதனைச் சரிசெய்ய கடையில் கொடுத்துள்ளார். ஆனால் அதனை சரிசெய்ய முடியாததால், அவரது போன் மாற்றித்தரப்பட்டுள்ளது. அதனை பெற்ற அந்த காவலர் மொபைலில் உள்ள IMEI எண்ணும் பெட்டியில் அச்சிடப்பட்டுள்ள IMEI எண்ணும் வெவ்வேறாக இருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து உ.பி. காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினரிடம் அந்த போனைக் கொடுத்துள்ளார். அவர்கள் அதன் IMEI எண்ணை சோதித்தபோது அதே IMEI எண் இந்தியாவில் 13,000 கைப்பேசிகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து செல்போன்களுக்கும் தனிப்பட்ட IMEI எண்களை கொடுக்கவேண்டும் என்பதே சர்வதேச விதிமுறை ஆகும். ஆனால், சட்டவிரோதமாக இவ்வாறு ஆயிரக்கணக்கான மொபைல்களுக்கு ஒரே எண் கொடுக்கப்பட்டுள்ளது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த IMEI எண்கள் கொண்ட தொலைபேசி மூலம் ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்கான திட்டம் தீட்டப்பட்டால், அதனைக் கண்டறிவது, அதுகுறித்து விசாரிப்பது முடியாத காரியமாகிவிடும் என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார். மேலும், இந்த 13,000 செல்போன்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுத் தவறுதலாக அனைத்திற்கும் ஒரே IMEI எண் அளிக்கப்பட்டிருக்கலாம், அல்லது திருடப்பட்ட கைப்பேசிகளை விற்பவர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இவ்வாறு எண்ணை மாற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து Vivo மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் சேவை மையம் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.