13 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது கான்பூர் டெகாட் மாவட்டம். இங்கு வசிக்கும் 16 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு தூக்கிவந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இந்த சம்பவம் அவனது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையின் உச்சம். தனது மகனின் அத்துமீறலைத் தடுக்காத பெற்றோர் சிறுமியைக் கொடூரமாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக யாரிடமாவது கூறினால், மேலும் பல விபரீதங்கள் நடக்கும் எனவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், படுகாயங்களுடன் வீட்டிற்கு வந்த சிறுமியை அவரது பெற்றோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி குற்றவாளிகளான சிறுவன் மற்றும் அதற்கு உதவிய அவனது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.