நாடு முழுவதும் மொபைல் எண்கள் தற்போது 10 இலக்கத்தில் உள்ளன. ஆனால், இனி வரப்போகும் மொபைல் எண்களும், ஏற்கெனவே உள்ள மொபைல் எண்களும் 13 இலக்க எண்களாக மாற்றப்படப் போகின்றன. அதற்கான வேலைகள் இனிதே தொடங்கிவிட்டதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட செய்தி
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில்தான் இந்த 13 இலக்க எண் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மெஷின் 2 மெஷின் தொடர்புக்கு இனி 13 இலக்க எண்களே பயன்படுத்தப்படும். இந்த முடிவு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்ப்படுத்தப்படும். அக்டோபர் 1ஆம் தேதி இதற்கான வேலைகள் தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என அந்தக் கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. இந்தத் தகவல் அரைகுறையாக புரிந்துகொள்ளப்பட்டு, இனி மொபைல் எண்களுக்கு 13 இலக்க எண்கள்தான் ஒதுக்கப்படும் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

மெஷின் 2 மெஷின் என்றால்..
இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IOT)ல் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் இந்த மெஷின் 2 மெஷின். இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் மூலமாக உலகின் எந்த மூலையில் உள்ள சாதனங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே கட்டுப்படுத்த முடியும். இப்படி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்ய இணைய வசதி அவசியம். இதற்காக பயன்படுத்தப்படும் மெஷின் 2 மெஷின் சிம் கார்டுகளின் எண்களைத்தான் தற்போது 13 இலக்கமாக மாற்றியிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிப்பை மெஷின் 2 மெஷின் சேவையை வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பின்பற்றவுள்ளன. ‘இதில் வதந்திகளுக்கு இடமில்லை. சாதாரண மொபைல் சேவை எண்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை’ என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.