மணிப்பூர் மாநில பத்தாம் வகுப்புக்கான தேர்வில் பங்கேற்ற 12 வயது மாணவன் 72 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளதற்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரின் சுராச்சந்த்பூரில் உள்ள காங்வாய் பஜாரில் வசித்துவரும் ஜென்கோலியன் வைபியின் (66) மகனான ஐசக் பவுலல்லுங்முவான் வைபே என்ற 12 வயது சிறுவன் இந்த ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்புப் பிரிவின் கீழ் எதிர்கொண்டுள்ளார். மணிப்பூர் மாநில கல்வி விதிமுறைகளின்படி, பத்தாம் வகுப்புத் தேர்வில் கலந்து கொள்ளும் ஒருவர், வாரியத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த 12 வயதான ஐசக், இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கச் சிறப்பு அனுமதி வேண்டி கடத்த ஆண்டு, சிறுவனின் தந்தை கல்வித் துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பின்னர், சிறுவனின் திறனைக் கருத்தில் கொண்டு, கல்வித்துறை அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வினை ஐசக் எதிர்கொண்டுள்ளார். இதில், நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று 72 சதவீத மதிப்பெண்களுடன் ஐசக் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மிக இளம்வயதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர் என்ற சாதனையை ஐசக் படைத்துள்ளார். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள இந்தச் சிறுவனுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.