இடி மற்றும் மின்னல் தாக்கி நேற்று ஒரேநாளில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல இடங்களில் கடந்த இருநாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக இரு மாநிலங்களில் உள்ள 31 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கடும் மழை பெய்தது. கடுமையான இந்த இடி மற்றும் மின்னலில் சிக்கி இரு மாநிலங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரில், மொத்தம் 23 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து மதுபானியில் எட்டு பேர் இறந்துள்ளனர். சிவான் மற்றும் பாகல்பூரில் தலா ஆறு பேர் உயிரிழந்தனர்.
உ.பி.யில் அதிகபட்சமாக இடி மற்றும் மின்னலால் தியோரியாவில் ஒன்பது பேரும், பிரயாக்ராஜில் ஆறு பேரும் பலியாகியுள்ளனர். இதனிடையே இதே போன்ற வானிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை இடி மின்னலுக்கு 107 பலியாகியுள்ள நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.