இந்தியாவில் ஓராண்டில் சுமார் 76,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடப்பதாக “தி ஸ்டேட் ஆப் டேக்ஸ் ஜஸ்டிஸ்” அமைப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தி ஸ்டேட் ஆப் டேக்ஸ் ஜஸ்டிஸ்” என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் எந்த அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெறுகிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இவ்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் ஆண்டுதோறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் 10.3 பில்லியன் டாலர் (ரூ.76,000 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1,000 கோடி டாலர்கள் அளவுக்கு ஆண்டுதோறும் வரி ஏய்ப்பு செய்வதாகவும், இந்தியாவில் உள்ள தனிநபர்கள் சுமார் 20 கோடி டாலர்கள் அளவுக்கு வரிஏய்ப்பு செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொகையானது, இந்திய அரசு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கும் மொத்த தொகையில் 44.70 சதவீதம் ஆகும். அதேபோல வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய முதலீடுகள் வாயிலாகவும் வரி ஏய்ப்புகள் இந்தியாவில் அதிகளவு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 42,700 கோடி டாலர்கள்(ரூ.31.66 லட்சம் கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெறுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள கேமன் தீவுகள் மொத்த உலகளாவிய வரி இழப்புகளில் 16.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதாவது 70 பில்லியன் டாலர் ஆகும். அதற்கடுத்த இடத்தில், 42 பில்லியன் டாலர் வரி ஏய்ப்புடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது உலகின் மொத்த வரி ஏய்ப்பில் 10 சதவீதம் ஆகும்.