இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக பிரபலமானவர்கள் அமலா சாஜி மற்றும் அவருடைய சகோதரி அமிர்தா சாஜி. அமலா சஜிக்கு 4.1 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். சினிமா காட்சிகளுக்கு பிரத்தியேக உடைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் வெளியிடுவது இவர்களது வேலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இணைய பிரபலமான அமலா சாஜியின் பேச்சை கேட்டு ஐ.டி ஊழியர் பணத்தை இழந்ததாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இன்ஸ்டா பிரபலமான அமலா சாஜி அவருடைய இணையதள பக்கத்தில் 'ஆன்யா ஃபாரெக்ஸ்' என்ற தன்னுடைய தோழியை அறிமுகப்படுத்தி அவர் ஆன்லைன் ட்ரெண்டிங் டிரேடிங் தொழில் செய்து வருவதாகவும், இதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். நானும் பெற்றுள்ளேன், என விளம்பரம் செய்துள்ளார். தன்னை பின்பற்றுபவர்கள் விருப்பப்பட்டால் அவரை தொடர்பு கொண்டு நீங்களும் ஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ஐடி ஊழியர் ஒருவர் 'ஆன்யா ஃபாரெக்ஸ்' என்ற சமூக வலைத்தள பக்கத்தை குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய பெண், ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 50 நிமிடத்தில் 10,000 ரூபாயாக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய ஐடி ஊழியர் அவர் அனுப்பிய கியூ ஆர் கோடை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் முதலில் செலுத்தியுள்ளார். 'கிரிப்டோ வேர்ல்ட்' என்ற செயலியின் மூலம் உங்களுடைய பணத்தை வைத்து டிரேடிங் செய்து தற்பொழுது 12,999 ரூபாய் லாபம் வந்துள்ளது என பதிலுக்கு அந்த பெண் ஸ்கிரீன்ஷாட் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து இதுபோன்று சம்பாதிக்க வேண்டும் என்றால் 9 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினால் மொத்தமாக 22 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளார். ஆனால் எனக்கு என்னுடைய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார் ஐடி ஊழியர். ஆனால் இப்படியாக குறுஞ்செய்திகள் சென்று கொண்டிருந்த பொழுது ட்ரேட் செய்ததில் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வந்துள்ளது என மேலும் ஆசை காட்டி, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மொத்தமாக டெபாசிட் பணம் உள்ளிட்டவற்றை அனுப்பினால் மொத்தமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தருவதாக ஐடி ஊழியரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். ஜிபே எண்ணையும் அந்த பெண் வாங்கியுள்ளார். ஆனால் பத்து முதல் 20 நாட்களாகியும் பணம் வந்து சேரவில்லை. தான் மோசடியில் சிக்கியதை அறிந்த அந்த ஐடி ஊழியர் அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.