பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கினாலும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பெளமிக், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, குஜராத், கோவா, ஜாா்க்கண்ட், உத்தரகாண்ட், அஸ்ஸாம், மிஸோரம் ஆகிய பத்து மாநிலங்களிலும் டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசுப் பணிகளை நிரப்பும் பணிகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து வருகிறது என அவர் பதிலில் கூறியுள்ளதோடு, பட்டியலினத்தவர்களுக்குச் செய்யப்பட்ட 28,435 மத்திய அரசுப் பணியிடங்களில் 14,366 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், பழங்குடி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 22,016 மத்திய அரசுப் பணியிடங்களில் 12,612 பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 28,562 மத்திய அரசுப் பணியிடங்களில் 15,088 பணியிடங்களும் காலியாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.