பெட்ரோல் விலையில் இன்று குறைக்கப்பட்ட 9 பைசாவை மோடிக்கே செக்காக ஒரு இளைஞர் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்க அரசு சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்தது. சமீபத்தில் நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடந்த சமயத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் நிகழாமல் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றின் விலை புதிய உச்சத்தை எட்டியபோது நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்து கோவத், மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் கொண்டு சென்ற 9 பைசாவுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். மேலும், பிரதமரின் நிவாரண நிதிக்கு சென்றடைந்ததை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.