Skip to main content

பாக்யராஜ் மீண்டும் ராஜினாமா கடிதம் அனுப்பியது ஏன்? சங்கத்தினர் அதிர்ச்சி!

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
b

    

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை சங்கத்தினர் ஏற்காத நிலையில்,  மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால் சங்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

 

செங்கோல் என்ற தனது படத்துக்காகத் பதிவு செய்திருந்த கதையைத் தான் சர்கார் -ஆக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாக எழுத்தாளர் சங்கத்தில் திரைப்பட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரை ஆய்வுசெய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், சர்கார், செங்கோல் கதைகளை ஆய்வுசெய்து, இரு கதைகளின் மையக்கருவும் ஒன்றுதான் எனக்கூறினார்.  இதையடுத்து நடைப்பெற்ற சங்கத்தின் பேச்சுவார்த்தையில் முருகதாஸ் உடன்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடந்தார்.

 

வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நின்றதால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்யராஜ் மீது குற்றம் சுமத்தினார்.  அவர் குறித்து அவதூறுபரப்பினார்.  முருகதாசுக்கு ஆதரவாகவும் சில இயக்குநர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  பட ரிலீசுக்கு குறுகிய காலமே இருப்பதால் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது.   இரு படத்தின் கருவும் ஒன்றுதான் என்று முருகதாஸ் ஒப்புக்கொண்டதோடு,  வருண் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போட்டுவிடுவதாகவும் தெரிவித்தார்.  சமரசம் ஏற்பட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

இதன் பின்னர் பாக்யராஜை சுற்றி சர்ச்சை எழுந்தது.  சர்கார் - செங்கோல் விவகாரத்தில் சர்க்கார் படத்தின் கதையை முழுமையாக வெளியே சொல்லிவிட்டதாகவும்,  அதனால் அவர் மீது சன் பிக்சர்ஸ் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பேச்சு எழுந்தது.   சங்கத்தில் உள்ள முருகதாஸ் ஆதரவாளர்கள் அனைவரும் கூடி பாக்யராஜை தலைவர் பதவியில் இருந்து தூக்குவது என்று முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. 

 

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  தனக்கு தேவையில்லாத அசவுகரியங்கள் ஏற்பட்டதால் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்தார் பாக்யராஜ்.    பெரிய இயக்குநர் என்று பார்த்து முருகதாஸ் பக்கம் செல்லாமல்,  நியாயத்தை பார்த்து உதவி இயக்குநர் பக்கம் நின்றதால் பாக்யராஜ் ராஜினாமா என்றதும் உதவி இயக்குநர்களூம்,  திரையுலகமும் கொந்தளித்தது.  அதனால் பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை நிர்வாகிகள் ஏற்கவில்லை.   ‘ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்’ என பாக்யராஜிடம் கூறிவிட்டனர்.

 

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.  மீண்டும் அவருக்கு ஏற்பட்ட தேவையில்லாத அசவுகரியங்கள் என்னவோ?  மீண்டும் தான் ராஜினாமா செய்வதாக கூறி, மற்றொரு கடிதத்தை  சங்கத்துக்கு அனுப்பியுள்ளார் பாக்யராஜ்.   இது சங்கத்தினரை மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநர்கள் சங்கத்தலைவராக ஆர்.கே செல்வமணி தேர்வு !

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

RK Selvamani elected chairman tamilnadu film directors association

 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் நேற்று (28.2.2022) நடைபெற்றது.  இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி இருவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 1,883 பேர் வாக்களிக்க தகுதி உடைய நிலையில், அஞ்சல் மூலம் 106 பேர் வாக்களித்துள்ளனர். தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 21 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. 

 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (28.2.2022) மாலை எண்ணப்பட்டது. அதில் 955 வாக்குகள் பெற்று ஆர்.கே செல்வமணி மீண்டும் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். 

 

 

Next Story

சர்கார் பட விவகாரம்; ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

High Court Cancelled case on Murugadoss basses on Supreme Court Order

 

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனால் அரசின் திட்டங்களைத் தவறாகக் குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டதாகவும், அதனால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமை எதிராகப்  பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.