திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை அவர்களிடம் திரும்பத் திரும்ப கேட்டு ஹா..ஹா..என்று சிரித்து மழுப்பினார் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினியிடம், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அந்த அளவிற்கு பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, அப்படின்னு நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போ நிச்சயமாக அப்படித்தானே இருக்க முடியும் என்று பதிலளித்தார்.
இதையடுத்து பாஜக ஆபதான கட்சி என்று ரஜினி கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் இன்று இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.
ரஜினி பேசியபோது, ‘’பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பது குறித்து நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. நான் முழுதாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. முழுசாக அரசியல் இறங்கிய பிறகு என் கருத்தை நான் சொல்கிறேன். ஆனால், பாஜக ஆபத்தான கட்சி என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அவர்களைப்பொறுத்தவரை பாஜக ஆபத்தான கட்சிதான். ஜனங்களுக்கு அது ஆபத்தான கட்சியா என்பதை ஜனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ஒரு கட்சி(பாஜக)யை எதிர்த்து மெகா கூட்டணி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘’10 பெர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்து போராடினால் யார் பலசாலி? போராடும் 10 பேர் பலசாலியா? அந்த 10 பேரை சமாளிக்கும் அவர் பலசாலியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்றவரிடம்,
‘பிஜேபி பலசாலி’ என்று சொல்லலாமா? என்ற கேட்டபோது, ‘புரிஞ்சுக்குங்க..’என்றார் ரஜினி.
பாஜகவுடன் நீங்க கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘அத அப்புறம் பார்த்துக்கலாமுங்க...’என்று சொல்லிவிட்டு சிரித்த ரஜினியிடம்,
‘மோடி பலசாலியா?’என்று கேட்க, டென்சன் ஆனார். பின்னர், ஒருத்தரை 10 பேர் எதிர்த்து யுத்தத்திற்கு போகும் போது 10 பேர் பலசாலியா? அந்த 10 பேரையும் எதிர்த்து நிற்கும் தனி ஒருவர் பலசாலியா? நீங்க சொல்லுங்க, என்று சொல்லிவிட்டு , ஹா....ஹா.. என்று சிரித்த ரஜினியிடம்,
‘நீங்க சொல்லுங்க..?’என்றதும், மறுபடியும் ரஜினி, ‘ஒருத்தரை எதிர்க்கும் 10 பேர் பலசாலியா? 10 பேரை சமாளிக்கும் ஒருவர் பலசாலியா?’ என்று திரும்பவும் செய்தியாளர்களிடமே கேட்டுவிட்டு, ஹா..ஹா...என்று சிரித்தார் ரஜினி.
பின்னர், யார் பலசாலி என்பது வரும் மக்களவை தேர்தல் தெரிந்துவிடும் என்று முத்தாய்ப்பாக முடித்தார்.