மதுரை வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளிக்கு 3 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் மூன்றாம் வகுப்பு மாணவர்களை இரும்புக் கதவுக்கு வெளியே நாள் முழுவதும் வெயிலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமதமாக வரும் மாணவர்களுக்கு இந்த தண்டனை இப்பள்ளியில் தொடர்ந்து தரப்படுபவதாக பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் முத்துராமலிங்கம்
சென்னை முகப்பேறு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வேலம்மாள் பள்ளி குழுமம் படிப்படியாக இன்று கிட்டதட்ட 40 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனை என வளர்ந்துள்ளது. மதுரையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் ஒழுக்கத்திற்கும், காலம் தவறாமைக்கும் என்றும் முக்கியத்துவம் அளிப்பதாக நிர்வாகம் கூறி வருகிறது.
இந்தப்பள்ளியில் காலையில் பள்ளி துவங்கும் நேரத்திற்கு சரியாக வரவேண்டும். தாமதமாக வந்தால் இரும்பு கேட் பூட்டப்படும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் கேட் பூட்டப்படும். மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் அப்படி பள்ளி பூட்டப்பட்டால் தங்களது பிள்ளைகளை கையோடு வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அதேநேரத்தில் ஆட்டோவிலோ, வேறு நபர்கள் உதவியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தாமதமாக வந்தால் கேட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கப்படுகிறார்கள். அன்று முழுவதும் அவர்கள் வெயிலில் நிற்க வேண்டும். தாமதமாக வந்ததற்காக பள்ளி நிர்வாகம் கொடுக்கும் தண்டனை இதுதான். பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வரும் மாணவர்கள் தாமதத்துக்காக வெளியே நிறுத்தப்பட்டால், அந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்கிறார்கள் பெற்றோர்களும், பொதுமக்களும்.
மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ கட்டுப்பாடு அவசியம்தான். ஆனால் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக அந்தக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய எண்ணமும், கோரிக்கையும்.
3 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கும் பள்ளி நிர்வாகம், அந்தப் பள்ளியின் பேருந்து 15 நிமிடங்களோ, அதற்கு மேலேயோ தாமதமாக வந்தால் ஏன் அனுமதிக்கிறது?. காரணம் பண வசூல் வேட்டைக்காகத்தான். அந்தப் பள்ளியின் நோக்கம் என்னவென்றால், கல்விக் கட்டணம் மட்டும் கட்டினால் போதுமா? பள்ளிப் பேருந்தில்தான் மாணவர்கள் வரவேண்டும், அதற்கான தொகையையும் பெற்றோர்கள் கட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறது. பள்ளி வாகனத்தில் மாணவர்கள் சென்றால் 3 நிமிடம் அல்ல... 3 மணி நேரம் கழித்துச் சென்றாலும் பள்ளியின் இரும்பு கேட் திறக்கும். பள்ளிக்குள் பேருந்து சென்றதும் பேருந்தில் இருந்து இறங்கி யாரிடமும் தாமததுக்கான காரணம் எதையும் சொல்லாமல் நேராக வகுப்பறையில் சென்று அமரலாம், வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் எதையும் கண்டுகொள்ளமாட்டார். இதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்றனர்.
மேலும் அவர்கள், தொடர்ந்து ஐந்து நாட்கள் மாணவர்கள் விடுமுறை எடுத்தால், மீண்டும் புதிதாகத்தான் அட்மிஷன் போட வேண்டும் என்று கராராக இருக்கிறது இந்த பள்ளி. தமிழக அரசு தனியார் பள்ளிகளை கவனிக்கிறதா? அரசு வகுத்து கொடுத்த விதிமுறைகளை பின்பற்றுகிறதா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா? கூடுதலாக வசூலிக்கிறார்களா? கல்விக் கட்டணம் பெற்றுக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகளை நாள் முழுவதும் வெயிலில் நிற்க வைப்பது இந்த சாலையில் சென்று வரும் அனைவருக்கும் தெரியும்போது, அரசுக்கு தெரியாதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொந்தளிக்கிறார்கள் பெற்றோர்களும், பொதுமக்களும்.