திருச்சி பொன்மலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எதிர்கட்சிகள் கலந்துகொண்டிருக்கும் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் பலகட்சி தலைவர்களும் பேசி வருகின்றனர்.
முதலில் விசிக தலைவர் திருமாவளவன் தேசம் காப்போம் மாநாட்டின் 14 தீர்மானங்களையும் வாசிக்க அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மோடியால் இனி இந்திய மண்ணில் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது, நாடாளுமன்ற தேர்தலுக்குபின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதிசெய்யும் அரசாக அமையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
இம்மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ எதிரானவர் இல்லை, அவர் தமிழ்நாட்டின் அம்பேத்கர் எனக் கூறினார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது, மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். வாஜ்பாய்க்கு மாற்று உருவானதுபோல் மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளை அதிகளவில் நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்ப வேண்டும். பாஜகவில் மோடி, அமித்ஷாவை தவிர யார் இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.