நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவை பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கையில் வண்ணத்தை உமிழும் புகை போன்ற வெடி பொருள் இருந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை அவர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கமிட்டதோடு தங்கள் காலனியில் மறைத்து வைத்திருந்த புகையை உமிழும் பொருளை எடுத்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்ற வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் அந்த இருவர் எப்படி பார்வையாளர் பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு வளையங்களை மீறி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலகட்ட சோதனைக்கு பின்னரே பார்வையாளர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. பல எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பிக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உள்ளே நுழைந்த இருவரும் மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தைக் காட்டி உள்ளே நுழைந்துள்ளது விசாரணை தெரியவந்துள்ளது.