தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல், காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்தம் மற்றும் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் என குடகு மாநிலமே கனமழையால் குளிர்ச்சியடைந்துள்ளது. மேலும், தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி நதிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கான இருமாநில உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், இன்னமும் காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை. இந்நிலையில், இன்று மதுரைக்கு வந்திருந்த கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘கடவுளின் அருளால் நல்ல மழை பெய்து காவிரி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இரு மாநிலங்களுக்கும் நீரைப் பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.