தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நாளை திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய உள்ளது. இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகக் களம்கண்டது. அதேபோல் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியுடன் தேர்தல் களம்கண்டது. வெளியான தேர்தலில் முடிவுகளின் பின் அதிமுக எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்தியது. கோவை தெற்கில் கமல் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த நிலையில், மாலையில் நிலவரம் மாற, பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் இறுதியில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தற்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகல் கடிதத்தை கமலிடம் கொடுத்துள்ளனர். அதேபோல் பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், மௌரியா, முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் மகேந்திரன், ''நிர்வாகக்குழு மீட்டிங் இன்று நடந்தது. அந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே கமல்ஹாசன் கட்சி நடத்தும் விதமும், சிலரின் ஆலோசனைப்படி நடப்பதும் எனக் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதாகத் தோன்றியது. ஆனால், இது தேர்தல் முடிவுக்குப் பின் மாறும் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்குப் பலர் உழைத்திருக்கிறார்கள். எனவே அவர்களது மனப்பான்மை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவருடன் இருந்தேன். ஆனால் அவர் கட்சி நடத்தும் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து மட்டுமல்ல கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். அவர் தமிழகத்தைச் சீரமைக்கிறாரோ இல்லையே மக்கள் நீதி மய்யத்தைச் சீரமைக்க வேண்டும். ஆனால் ஒரு நண்பராக எப்பொழுதும் இருப்பேன்'' என்றார்.