Skip to main content

காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு 100 சதவீதம் தோல்வி: தமிமுன் அன்சாரி 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
thirumeni


காஷ்மீர் விஷயத்தில் நரேந்திரமோடி அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்திருக்கிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
 

சென்னை ஆவடிவைச் சேர்ந்த ராஜவேல் தனது மனைவி செல்வி, மகன் திருமணிசெல்வம் (23) ஆகியோருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். ஸ்ரீநகர் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனைவரும் பஸ்சில் பயணம் செய்தபோது அங்கு நடந்த மோதலில் கற்கள் வீசப்பட்டன. ராஜவேல் குடும்பத்தினர் சென்ற பஸ் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் திருமணிசெல்வத்தின் தலையில் அடிபட்டதில் அவர் உயிரிழந்தார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
 

இந்தியாவின் சுவட்சர்லாந்து என்று சொன்னால் அதுதான் காஷ்மீர். பனி படர்ந்த மலை தொடர்களும், அழகிய பசுமை மரங்களும், பள்ளத்தாக்குகளும், ஆப்பிள் மரங்களும், குங்குமப் பூச்செடிகளும் காஷ்மீரின் அழகை கண் முன்னால் கொட்டுகின்றன.
 

அந்த அழகிய காஷ்மீர் இப்போது இந்திய படைகளின் மனித உரிமை மீறல்களாலும், போராட்டக்காரர்களின் கல்வீச்சு சம்பவங்களாலும் ரத்தத் துளிகளோடு காட்சி அளிக்கிறது.
 

modi


 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதியை நிலைநாட்டுவோம் என்றும், உலக சுற்றுலா பயணிகளை காஷ்மீரில் நிரப்புவோம் என்றும் பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்தார்கள். இன்று அவர்களின் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. முன்பைவிட இப்போது கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. போராட்டங்கள் கிராமங்கள், நகரங்கள் எங்கும் நடந்து வருகிறது. காஷ்மீர் விஷயத்தில் நரேந்திரமோடி அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்திருக்கிறது.
 

கோவிலின் கருவரைக்குள்ளேயே பாஜகவின் ஆதரவாளர்கள் ஆஷிபா என்ற 8 வயது பிஞ்சு பூவை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். காவல்துறையில் சிலரும், பா.ஜ.க. அமைச்சர்களில் சிலரும் பகிரங்கமாக இதற்கு ஆதரவு கொடுத்த வெட்கக்கேடு நடந்திருக்கிறது.

 

thamimun ansari


 

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியான ஜம்மு காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருக்கிறது. அதற்கு மற்றொரு உதாரணம், நமது அன்பு தம்பி திருமணி என்ற ஒரு தமிழரை பறிகொடுத்திருக்கிறோம். சுற்றுலா சென்ற ஒருவருக்கு பாதுகாப்பற்ற நிலை காஷ்மீரில் நிலவிக்கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டது.
 

நமது அன்பு திருமணி துயர மறைவுக்கு நாங்களும் கண்ணீர் சிந்துகின்றோம். அந்த குடும்பத்தின் மீளா துயரத்தில் உணர்வோடும், உரிமையோடும் பங்கேற்கின்றோம். இதுபோன்று எந்த உயிரும் இனி காஷ்மீர் மண்ணில் பலியாகக்கூடாது. காஷ்மீரில் மக்கள் உதவியோடு அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். துப்பாக்கி முனையில் சமாதானத்தை பேசக்கூடாது. மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்கும் வண்ணம் அங்கு பேச்சுவார்த்தைகளை நடத்தினால் அமைதியை நிலைநாட்ட முடியும். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்