உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டு சரக்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் அவசியம் கடைகள் திறக்கப்படும் என்பதால் இன்று காலை முதலே மதுப்பிரியர்களின் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. இன்று அதி காலையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு சென்று வரிசையில் காத்திருக்க ஆரம்பித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் டாஸ்மாக் கடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் நீண்ட வரிசையில் நிற்கும் குடிப்பிரியர்கள் முன்னேற்பாடுகளுடன் ஆளுக்கு ஒரு குடை எடுத்துவந்து அதை வெயில் படாமல் பிடித்தபடி மதுபாட்டில் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையிலும் நீண்ட வரிசையில் மதுபானம் வாங்க காத்திருந்தனர்.
தமிழக அரசு குடிப்பிரியர்களுக்கு டோக்கன் முறையில் தான் சரக்கு தரப்படும் என்று அறிவித்து அதன்படி டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி அரசு வழங்கிய டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து ஒரு டோக்கன் இருநூறு ரூபாய் என்று கடலூரில் விற்பனை செய்துள்ளனர். இந்தப் போலி டோக்கன் டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்கள் உடனடியாகத் காவல்துறைக்குத் தகவல் தெரியப்படுத்த, அங்கு நின்றிருந்த போலீசார் போலி டோக்கன் கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற 12 பேர்களைக் கைது செய்துள்ளனர்.