
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது. இதில் கடந்த மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்தது. அரசு குறிப்பிட்டிருந்த ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும் என்பதைப் பின்பற்றவில்லை எனவும், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில், உடனடியாக டாஸ்டாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்கவேண்டும். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளை மூட ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே கடைகளைத் திறக்க முடியுமா? அல்லது ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய வேண்டுமா? என்பது தெரியவரும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.