கரோனா பாதிப்பு சென்னை மண்டலத்தில் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து புதிய திட்டமிடல்களுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். அவர்களுடன் தினமும் ஆலோசித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அப்படிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படிதான், கரோனா பாதித்தவர்களைக் காப்பாற்ற தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவச் சிகிச்சையை சென்னை மாநகராட்சி நடைமுறைப் படுத்திவருகிறது. இதற்காகச் சென்னையில் தமிழ் மருத்துவத்திற்கான சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த மையங்களில் தமிழ் மருத்துவத்தில் உள்ள மூலிகைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சிகிச்சை, ஆங்கில மருத்துவத்தை விட 100 சதவீதம் நன்மையைக் கொடுத்துள்ளதாக அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை என்பது இந்தச் சிகிச்சைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவ மையங்களை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி, "கரோனாவைத் தடுப்பதில் சித்த மருத்துவம் சிறந்து விளங்குகிறது. கரோனா தாக்கப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதில் சித்த மருத்துவச் சிகிச்சை முறைகள் நல்ல பலனைக் கொடுத்து வருகிறது. அதனால், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அதிகரிக்கச் செய்யுங்கள். தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து இதனைச் செயல்படுத்துங்கள்" என மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.க்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் வேலுமணி.