பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி ராமதிலகம் தனது உத்தரவில், ’’எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார். பேஸ்புக் கருத்தை உள்நோக்கத்துடன் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது. குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம். வளர்ச்சி, முதிர்ச்சி பெற்ற நபர் செய்யும் குற்றங்களை மன்னிக்க முடியாது. பணிபுரியும் பெண்கள் பற்றி பதிவில் கூறியிருந்ததை விட கடுமையாக கூற முடியாது. கருத்து பகிர்ந்ததை குறித்து மட்டுமே எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், பதிவில் இருந்த கருத்துக்களை எஸ்.வி.சேகர் மறுக்கவில்லை. பெண்களுக்கு எதிரான இது போன்ற கருத்துக்களை கூற யாருக்கும் உரிமையில்லை.
படுக்கையை பகிர்ந்துகொள்வதால் மட்டும்தான் பெண்கள் மேலே வரமுடியுமா? உயர் பதவியில் உள்ள் அனைத்து பெண்களுக்கும் இது பொருந்துமா? உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்வது என்பது தலைவருக்கான ஒரு குணம். சமூக உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உறுவாக்க வேண்டும். வேற்றுமையையும் பதற்றத்தையும் உண்டாக்க கூடாது.
கருத்தை பேசவும் எழுத்துப்பூர்வமாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எழுத்துப்பூர்வமாக சொல்லும்போது அது ஆவணமாக மாறிவிடுகின்றது. சமூக வலைத்தளத்தில் எதையும் சொல்லிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. எஸ்.வி.சேகரின் கருத்து பெண்ணினத்திற்கு எதிரானது.’’என்று தெரிவித்துள்ளார்.