நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சூழலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அதே சமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் இன்று (29.03.2024) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பெரியார். இந்த பெயரை சொன்னாலே தமிழ்நாட்டின் 80 சதவீத சரித்திரத்தை பேசிவிடலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பு. அதன் பிறகு அந்த அன்பை மட்டும் காட்டி விட்டு போய்விடாமல் அந்த வேட்பாளரை வெற்றி பெறவும் செய்தீர்கள் என்பது இரண்டாவது காரணம். நான் இங்கே வந்திருப்பதற்கு காரணம் பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக தான். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்கள் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் இது” எனத் தெரிவித்தார்.