திமுக தமிழகம் முழுவதும் கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பாய்ச்சல் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம் இன்றுமாலை நடைபெற்றது. கட்டேரி என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரான சுகவனம் கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்தில் ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக எடப்பாடி அரசையும், மத்தியில் ஆளும் மோடி அரசையும் விமர்சித்து பேசினார்.
அந்த சமயம், அதிமுகவை சேர்ந்த கோபி என்பவர் , ’உன் ஆட்சி என்ன செய்தது? திமுக காரர்கள் ஏமாற்றுக்காரர்கள்’ எனச்சொல்லி , சுகவனத்தை தாக்க முயற்சித்துள்ளார். இதில் அதிர்ச்சியான திமுகவினர், தாக்க பாய்ந்த கோபியை பிடித்து அடித்து உதைத்து விரட்டினர். இதனால் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துக்கொண்டு ஜோலார் பேட்டையில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் தேனீர் அருந்த சென்றுள்ளார் சுகவனம்.
அங்கும் வந்து பிரச்சனை செய்த கோபி, ’எங்க அமைச்சரின் ஊரிலேயே வந்து, அவரை எதிர்த்து பேசினால் எரித்துவிடுவேன்’ என கூச்சல் போட்டுள்ளார். இதனால் கோபியை எச்சரித்து விரட்டினர். இதையடுத்து மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு, தன்னை திமுகவினர் தாக்கிவிட்டார்கள் என்று போலீசில் புகார் தந்துள்ளார் கோபி. பதிலுக்கு திமுகவினரும் கோபி மீது புகார் அளித்துள்ளனர்.