வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வாக்கில் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் இன்று (30.11.2023) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கக் கடலில் புயல் உருவாவதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவானதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கடிதத்தில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.