
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை மொத்தம் 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 14ஆம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கியது. மேலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அசாம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 110 மாவட்டங்கள் 100 மக்களவைத் தொகுதிகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகலாந்து தலைநகர் கொஹிமா பகுதியில் நேற்று (16-01-24) யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.க.வும் இணைந்து ஜனவரி 22 நிகழ்வை முற்றிலும் மோடி நிகழ்வாகவும், அரசியல் நிகழ்வாகும் மாற்றி வருகின்றன. இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க நிகழ்வாகக் கொண்டாடப்படுவதால் தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
நாங்கள் அனைத்து மதங்களையும், திறந்த மனதோடு அணுகுகிறோம். அனைத்து மத நடைமுறைகளையும் மதிக்கிறோம். ராமர் கோவில் திறப்பு விழா குறித்து இந்து மத தலைவர்கள் கூட அதனை அரசியல் விழா என விமர்சித்துள்ளனர். ஆகையால், பிரதமரை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் அரசியல் நிகழ்வில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விழாவாக அடையாளப்படுத்தப்படும் ஓர் நிகழ்வில் எங்களால் கலந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.