தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், நீமுச் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்தவுடன் 27 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் பணியை காங்கிரஸ் செய்யத் தொடங்கியவுடன், பெரிய தொழிலதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விவசாயிகளுக்கான அரசை திருடி பா.ஜ.க ஆட்சி அமைத்துவிட்டது.
இப்போது நாட்டின் ஊழல் தலைநகரமாக மத்தியப் பிரதேசம் திகழ்கிறது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் ஒரு இடைத்தரகருடன் பேரம் பேசும் வீடியோவை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். இந்த பேரம் தொடர்பாக நமது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பார்க்க வேண்டும். மேலும், அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் மத்திய அமைச்சரின் வீட்டுக்கோ அல்லது அவரது மகனின் வீட்டுக்கோ செல்லுமா? மத்தியப் பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஊழல் செய்வதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். பணமதிப்பிழப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. பிரதமர் மோடி பொய் சொல்கிறார். மத்தியப் பிரதேசத்தில் 500 தொழிற்சாலைகள் அமைத்ததாக அவர் கூறுகிறார். ஆனால், இதுவரை ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை என்பதே உண்மை. அவரது இந்த பொய் நீடிக்காது, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அலை வீசுகிறது. காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.