பூம்புகார் அருகே உள்ள மீனவ கிராமமான வானகிரியில் கோயில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெரியவர்களுக்கு வாந்தி,பேதி மயக்கம், ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகை மாவட்டம் பூம்புகாருக்கு அடுத்துள்ள மீனவ கிராமம் வானகிரி. அங்கு பிரசித்தி பெற்ற ரேணுகா பரமேஷ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெற்றது. குடமுழுக்கு திருவிழாவிற்கு நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, தரங்கம்பாடி, காரைக்கால், பழையார், சின்னங்குடி, உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
அங்கு விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை வெயிலின் ஊஷ்ணத்தை தணிக்க சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும், பெரியவர்களும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், எற்பட்டு கீழே விழுந்துள்ளனர். அவர்களை மூன்று வேன்கள் மூலம் மூன்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதில் 70 பேர் மயிலாடுதுறை மருத்துவமனையிலும், 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி மருத்துவமனையிலும், 20 பேர் திருவெண்காடு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகையில், "பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம், தரங்கம்பாடி, பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதி இல்லாமல், அங்குள்ள மக்கள் சாதாரண பிரச்சனை என்றாலும் மயிலாடுதுறையை மருத்துவமனையை நாடியே வரவேண்டியிருக்கிறது. மயிலாடுதுறை மருத்துவமனையோ, தலைமை மருத்துவமனையாக இருந்தும், அங்கு டாக்டர்கள்கூட இல்லாமல் திருவாரூர், தஞ்சாவூருக்கு அனுப்பும் நிலையே உருவாகியுள்ளது. இந்த சம்பத்தில் கூட திருவாரூருக்கு அனுப்ப முயற்சித்தனர், நாங்கள் போராடியதால் பல மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டியூட்டி டாக்டர்கள் கூட இல்லாமல், பரிதாபமான சூழலே மயிலாடுதுறை மருத்துவமனையில் உள்ளது." என்கின்றனர் வருத்தமாக. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.