Skip to main content

பெண்களை தரதரவென்று இழுத்துச்சென்று கைது செய்த போலீசார்!; எட்டு வழிச்சாலையால் எகிறும் பதற்றம்

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
p2


சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்பட 16 பேரை தரதரவென்று இழுத்துச்சென்று காவல்துறையினர் கைது செய்தனர். 


சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலைத் திட்டம், விளை நிலங்கள் ஊடாகச் செல்கிறது. இதற்காக விவசாயிகளின் கருத்து அறியாமலேயே சேட்டிலைட் தொழில்நுட்ப உதவியுடன், வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து முட்டுக்கல் நடும் பணிகளை முடித்தனர். 

 

p3


சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரப்பட்டி, கூமாங்காடு பகுதியில் முட்டுக்கல் நடப்பட்டு உள்ள நிலங்களில், இன்று (ஜூலை 3, 2018) 'மேனுவல் சர்வே' பணிகளுக்காக அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சென்று இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டு இருந்தது. 


அதிகாரிகளை நிலத்திற்குள் இறங்க விடாமல் அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ''அத்துமீறி விளை நிலத்துக்குள் காலை வைத்தால் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம்,'' என இரண்டு பெண்கள் ஆவேசமாக கூறியபடி அங்கிருந்து ஓடினர்.

 

ps


சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அதிகாரிகள் சென்றபோது விளை நிலங்களில் 50க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நில உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான வாக்குவாதம் அறிந்து, அவர்களும் திரண்டு வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கினர். 


''வரும் 13ம் தேதி எங்களது ஆட்சேபனை மனுக்கள் மீது சட்டப்பூர்வ விசாரணை நடக்கிறது. அதற்குப் பிறகு நில அளவீடு செய்யுங்கள்,'' என்று விவசாயிகள் கூறியதை அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.


வயலில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களும், ''மண்ணுதான் எங்களுக்கு உசுரு. எந்தக் காரணத்துக்காகவும் நிலத்தைத் தர மாட்டோம். வேணும்னா எங்களைக் கொன்னுட்டு எடுத்துட்டு போவுட்டும்,'' என்றனர். பல பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

 

pp


இதனால் பாரப்பட்டி கிராமத்தில் பதற்றமான சூழல் உருவாகியது. ஒருகட்டத்தில் விவசாயிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய காவல்துறையினர், அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர். அதற்கான முன்திட்டத்துடன் வாகனங்களைக் கொண்டு வந்திருந்த காவல்துறையினர், சின்னப்பன், குணசேகரன், கிருஷ்ணன், காமராஜ், வரதராஜ், ரமேஷ், சந்திரா, செல்வி, கோகிலா, தமிழ்செல்வி, தாரகேஸ்வரி, லட்சுமி, விஜயலட்சுமி, கவுசல்யா உள்பட 16 பேரை கைது செய்தனர். இவர்களில் 8 பேர் பெண்கள்.


பெண்கள் என்றும் பாராமல் ஆண் காவலர்கள்கூட அவர்களைக் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்று வாகனத்திற்குள் ஏற்றினர். அவர்களின் ஆடை விலகுவதையும் காவல்துறையினர் பொருட்படுத்தவில்லை. 


கைது செய்யப்பட்ட அனைவரையும் மல்லூரில் உள்ள வெங்கடேஷ்வரா கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மாலை 5.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கைதுக்குப் பிறகு, விளை நிலத்துக்குள் இறங்கி வழக்கம்போல் அதிகாரிகள் அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.


உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளை தொடர்ந்து கதற விடும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாலாபுறமும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

சார்ந்த செய்திகள்