பாமகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி்யின் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம்:
’’இவ்வளவு நாள் தாமதமாக நான் ஏன் விலகுகிறேன் என்றால், மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். அந்த தொகுதி மட்டுமல்லாது எல்லா தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை காரி காரி துப்புகிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள்.
வருசக்கணக்கில் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. போன மாசம் வரைக்கும் எவ்வளவு மோசமாக பேசமுடியுமோ அவ்வளவு மோசமாக பேசிவிட்டு ஒரே மாதத்தில் மாறி கூட்டணி அமைத்தால் இவர்கள் சொன்னதை எப்படி நம்ப முடியும்?
வன்னியர் சமுதாயத்தையும், எங்களைப்போன்ற வேறு சமுதாயத்தையும் அடகு வைத்துவிட்டார்கள். பாமகவை பொறுத்தவரைக்கும் வெளியிலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். உள்ளே ஒன்றும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை வெளியிடுவார்கள். மாதிரி வேளாண் அறிக்கை வெளியிடுவார்கள். பொதுவாக பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும். உதாரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டே பின்னால் பேரம் பேசி பணம் வாங்கிக்கொள்வார்கள்.
ராமதாஸ் வெளியிட்ட கழகத்தின் கதை புத்தகத்தை படித்தால் அதிமுகவினர் தற்கொலை செய்துகொள்வார்கள். ஜெயலலிதா உள்பட அனைவரையும் அவ்வளவு கேவலமாக, அசிங்கமாக, கொடூரமாக பேசியுள்ளார் ராமதாஸ். 100 வினாக்கள் என்ற புத்தகத்தையும் வெளி்யிட்டுள்ளார் ராமதாஸ். ’’எழுக தமிழ்நாடு’’ என்று ஒரு புத்தகம், ’’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’’ என்று ஒரு புத்தகம், ’’புதிய அரசியல் புதிய நம்பிக்கை ’’என்று ஒரு புத்தகம், ’’கேட்டது நீதி கிடைத்தது சிறை’’ என்று ஒரு புத்தகம். நான் கட்சியில் சேரும்போது இந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தார் ராமதாஸ். இந்த புத்தகங்களில் உள்ள வார்த்தைகளுக்கும் இப்போது அவர் பேசுவதற்கும் சம்பந்தமே இல்லை.
டயர் நக்கிகள் என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது நானும் அருகில் இருந்தேன். ஆண்மை இல்லாதவன் என்று ஒரு அமைச்சரை விமர்சித்தார் அன்புமணி. இன்று அவர்களோடு கைகோர்த்துக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அக்கட்சியினரோடு கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை அளிக்கிறது’’என்று ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி, தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.