இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், ஊராட்சி மன்ற தலைவராக பெண் வேட்பாளர் ராமலட்சுமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி தேர்ந்தெடுப்பதற்கு, அக்கிராமத்தில் உள்ள ஆறு வார்டு உறுப்பினர்கள் ஓட்டளிக்க வேண்டும். அவ்வாறு ஓட்டளிக்கும் வார்டு உறுப்பினர்களுக்கு, பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்பட்டு, துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அக்கிராம வளர்ச்சி குழு என்ற பெயரில் 'நியாயமான முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், லஞ்சம் கொடுத்து தேர்ந்தெடுக்கப்படும் துணை தலைவர், ஊராட்சி நிதியில் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளது என்பது போல் கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்பை சிறப்பான முறையில் கட்டமைப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், லஞ்சம் பெற்று கொண்டு துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருங்கூர் ஊராட்சி நிதி வரவு, செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறும் போது, தவறு இருக்கும் பட்சத்தில், ஊராட்சி பிரதிநிதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருங்கூர் கிராமம் தமிழகத்தில் சிறந்த கிராமமாக அமையவேண்டும் என்றும் போஸ்டரில் கூறபட்டுள்ளது.
இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை பற்றி, அறிந்த கிராம மக்கள் பலர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், ஊராட்சிமன்றத் துணைத் தலைவரை, லஞ்சம் கொடுக்காமல் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் லஞ்சம் கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இச்சம்பவத்தால் கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.