பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபத்தில் தலைமறைவானார். காலாவதியான பாஸ்போர்ட் வைத்துள்ள நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. அதனையடுத்து ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டதாகவும், அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்ததோடு, தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.
நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை இன்டர்போல் பிறப்பித்துள்ள நிலையில், நித்தியானந்தா, கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் பகுதியில் உள்ள தீவு நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றத்தில் லெனின் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு மற்றும் நித்தியானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தீர்பளித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த நீதிபதி குன்ஹா என்பது குறிப்பிடத்தக்கது