இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. அதேபோல், தமிழ்நாட்டிலும் கரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுக்க துவங்கியது. ஆனால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது. இதில் முக்கிய பங்காக கரோனா தடுப்பூசி பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு முதலில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், அரசின் தொடர் விழிப்புணர்வால் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல், தமிழ்நாடு அரசு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்திவந்தது. அதன்பிறகு அதனை சனிக்கிழமைக்கு மாற்றி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நாளை (06.11.2021) நடைபெறவிருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. தீபாவளி தொடர்விடுமுறை காரணமாக இந்த வார தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல், தொழிற்சாலை ஊழியர்களுக்கான தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் சனிக்கிழமைக்குப் பதில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.