ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மேலும் சில கடைகளைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவல் குறைந்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகளை சில விதிமுறைகளோடு மத்திய அரசு தளர்த்தி வருகிறது.
கடந்த மார்ச் 25- ஆம் தேதி மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. ஆனால், கரோனா பரவல் கட்டுக்குள் வராததையடுத்து ஊரடங்கு மே 3- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், கரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் மட்டும் ஏப்ரல் 20 முதல் விதிமுறைகளோடு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு வரும் நிலையில், நேற்று நள்ளிரவு புதிய அறிவிப்புகள் சிலவற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் புதிதாகச் சில கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பில்,
மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தில் பதிவு செய்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகள், நகராட்சியில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் சில்லறை விற்பனை மளிகைக் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஷாப்பிங் மால் அல்லாத சிறிய கடைகள் போன்றவற்றையும், மாநகராட்சி, நகராட்சிக்கு எல்லைக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட சந்தைகளுக்குள் இருக்கும் கடைகளையும் திறந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அனைத்து விதமான சந்தைகளும் செயல்பட அனுமதி.
நகர்ப்புறங்களில் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படலாம்.
கிராமப்புறங்களில் அத்தியாவசியமில்லாத சேவைகளை அனைத்துக் கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்துப் பிற பகுதிகளில் இருக்கும் மார்க்கெட், காம்ப்ளக்ஸ் கடைகளைத் திறக்கலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முடிதிருத்தும் கடைகள் திரும்ப திறக்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, "முடிதிருத்தும் கடைகளைத் திறக்க தற்போதைக்கு அனுமதி இல்லை. அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான பாடப் புத்தகக் கடைகள், மாவு அரைக்கும் மில்கள், மின்விசிறி விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் ஸ்டோர், மொபைல் ரீசார்ஜ் கடைகள், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றைத் திறக்க ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.