நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார்.